Skip to main content

தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் சி.ஆர்.சரஸ்வதி! -அமமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார்!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019


தேர்தல் முடிவுகளால் அமமுக ஆட்டம் கண்டுவிட, நிர்வாகிகள் பலரும் வேறு கட்சிகளுக்குத் திசைமாறிய பறவைகளாகப் பறந்துகொண்டிருக்க, இருப்பவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, ஆறு மண்டலப் பொறுப்பாளர்களையும் அழைத்து, 20-ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் கூட்டம் நடத்தினார், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.  

 

c


பழனியப்பன், ரெங்கசாமி, அன்பழகன், தங்க தமிழ்ச்செல்வன், மாணிக்கராஜா போன்ற மண்டல பொறுப்பாளர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  ஆதரவு (முன்னாள்) எம்.எல்.ஏ.க்களைக்கூட அந்தக் கூட்டத்தில் அனுமதிக்கவில்லை. ‘படுதோல்விக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதற்கு உயர்மட்டக்குழு நியமிக்க வேண்டும்’ என்று கொள்கை பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன்,  தனது கருத்தாகக் கூற, “நீங்கதானே உயர்மட்டக்குழு. இன்னொரு உயர்மட்டக்குழு உங்களைப் போன்றவர்களிடம், தோல்விக்கு என்ன காரணம் என்று கேள்வி கேட்டு விசாரிக்க வேண்டுமா? தேவையில்லை.” என்று கறாராக அவருடைய கருத்தை அப்போதே நிராகரித்திருக்கிறார் டிடிவி தினகரன்.  


தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியில் நீடிப்பது சந்தேகம்தான் என்பது தினகரனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட, அவருடைய இடத்தில் (கொள்கை பரப்புச் செயலாளர்) யாரைப் போடலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். கூட்டம் முடிந்தபிறகு, தினகரனின் எண்ண ஓட்டம் ஒருசில நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஜுலை 4-ஆம் தேதி அக்கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவிக்கப் போகிறாராம் தினகரன்.  தற்போது செய்தி தொடர்பாளராக இருக்கும்  சி.ஆர்.சரஸ்வதியை கொள்கை பரப்புச் செயலாளராகவும்,  வெற்றிவேலை பொருளாளராகவும்,  ரெங்கசாமி மற்றும் பழனியப்பனை  துணை பொதுச்செயலாளர்கள் ஆகவும் அறிவிக்கும் முடிவில் இருக்கிறாராம் தினகரன்.  

சார்ந்த செய்திகள்