Skip to main content

'காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லையா?'- சீமான் பேட்டி  

Published on 02/11/2024 | Edited on 02/11/2024
 'Congress, AIADMK not your enemy?'- Seeman interview

அண்மையில்  நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய் கட்சியின் பல்வேறு கொள்கைகளை எடுத்துரைத்தார். அப்பொழுது திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இரு கண்களாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழ் தேசியத்திற்கு நேர் எதிரில் எதிரானது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும். தமிழ்நாடு, பிறந்தநாளை நான் கொண்டாடுவேன். தமிழ்நாடு என்று  அண்ணா பெயர் வைத்த ஜூலை 18 அவர்கள் கொண்டாடுவார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மு.க.ஸ்டாலின் பேசிய காணொளிகள் இருக்கிறது. நவம்பர் ஒன்றை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பேசிய பேச்சு இன்றும் இருக்கிறது.

இந்த நிலத்தை கெடுக்கும் நச்சு ஆலைகளை ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் என எல்லா நச்சு திட்டங்களையும் திராவிடம் அனுமதிக்கும். நிலத்தின் வளத்தை பாதுகாக்க தமிழ் தேசியம் துடிக்கும். எதிர்த்து போராடும். இரண்டும் ஒன்றா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் தேசியம். திராவிடம் தமிழை திட்டமிட்டு அழிக்கும். இரண்டும் ஒன்றா? தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும். கல்வி என்பது மானிட உரிமை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இது தமிழ் தேசியம். இந்த நாட்டு குடிமக்கள், பள்ளி, கல்லூரி போகின்ற மாணவர்கள், உழைப்பவர்கள் எல்லாரும் குடிக்க வேண்டும் இது திராவிடம். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும்?'' என பேசியிருந்தார்.

 'Congress, AIADMK not your enemy?'- Seeman interview

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில், '' திராவிடம் என்ற விஷமும் தமிழ்த்தேசியம் என்ற மருந்தும் எப்படி ஒன்றாகும். சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனதையும் மொழியும் ஒப்பிடுவது சரியா? ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம் மொழி. எந்த நாட்டுக்கு போனாலும் யார் கேட்டால் நான் இந்து, நான் முஸ்லீம், நான் கிறிஸ்டியன் என்று சொல்ல முடியாது. அதேபோல் நான் தேவர், நான் கோனார், நான் நாடார் என்றும் சொல்ல முடியாது. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழிதான் நமது அடையாளம்.

இலங்கையில் தமிழ் மக்கள் தனெக்கென ஒரு நாடு வேண்டும் என கேட்டது பிரிவினை வாதமா? விடுதலையா? சாதியையும், மதத்தையும் மொழி, இனத்துடன் ஒப்பிடுவதே அறிவற்றத்தனம். திராவிடத்தை வளர்க்க கட்சி என்றால் இங்குதான் திராவிடமே வலிமையாக இருக்க கட்சிகள் இருக்கிறதே. அடுத்த தலைமுறைக்கும், அதற்கடுத்த தலைமுறைக்கும் திராவிடத்திற்கு தலைவர்கள் தயாராக உள்ளனரே. பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? நீட், அணுவுலை என பல நாசகார திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் தான். பாஜக சத்தமாக இந்துத்துவா பேசும், காங்கிரஸ் சத்தமின்றி இந்துத்துவா பேசும். இரன்டும் ஒன்றுதான். அதிமுக தலைவி ஊழல் செய்யவில்லையா? அப்போது காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லையா? ஒன்று கொள்கையை மாத்தணும் இல்லை எழுதி கொடுத்தவரை மாற்ற வேண்டும். இரண்டையும் வைத்துக் கொண்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அண்ணன் தம்பி உறவு வேறு அரசியலில் எதிரி என வந்துவிட்டால் அது வேறு. கடவுளே என்றாலும் கொள்கையில் வேறுபாட்டால் எதிரிதான். இலங்கையில் லட்சக்கணக்கான இன மக்கள் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? ஆந்திர காட்டில் வைத்து 20  தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விஜய்யின் கருத்து என்ன? '' எனப் பேசினார்.

விசிக திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. விசிக- தவெக கூட்டணிக்கு இதன் மூலம் வாய்ப்பிருக்குமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'திருமாவளவன் எங்களுடைய ஆசிரியர். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். அவர் ஒருபோதும் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமாக இறங்க மாட்டார்'' என்றார்.

சார்ந்த செய்திகள்