கரோனாவிற்கு பிறகு உலகத்தை அடுத்தபடியாக அச்சுறுத்தி வருகிறது குரங்கு அம்மை எனும் நோய். பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது மீண்டும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று பதிவாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து இந்தியாவருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு குரங்கமைக்கான அறிகுறிகள் தென்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய விவரங்கள் குறித்து விசாரிக்கையில் திருவாரூர் மாவட்டம் தெற்குபட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.