திருப்பதியில் காட்டுப்பகுதி அழைத்துச் செல்லப்பட்டு மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏ.எம்.புரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டில் வசித்து சுஷாந்த் என்ற 22 வயது இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அழைத்துச் சென்றுள்ளார். சாக்லேட் கொடுத்து ஆசை காட்டி அழைத்துச் சென்று வனப்பகுதியில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியைக் கொன்று அவரது உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார்.
காணாமல் போன சிறுமியைப் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதேபோல் சுஷாந்த் மீது அந்த பகுதி மக்களுக்கும் சந்தேகம் இருந்ததால் அவரை பிடித்து பொதுமக்களே தர்ம அடி கொடுத்தனர். இதில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்றதை சுஷாந்த் ஒப்புக்கொண்ட நிலையில் சிறுமியை கொன்று புதைத்த இடத்தையும் அடையாளம் காட்டினார். புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்த போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி உள்ளனர். புத்தூர் மருத்துவமனையில் சிறுமியின் உடலானது வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கொலை செய்த சுஷாந்த் சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.