தமிழக அரசு ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசாக முழு கரும்புடன் 21 வகையான பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று (4-ம் தேதி) மு.க. ஸ்டாலின் அந்தத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதில் குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
அதேபோல், மக்களுக்கு முன்னதாக பொங்கல் தொகுப்பை வாங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன் பெற்றவர்கள் பொங்கல் தொகுப்பைப் பெறுவதற்காக நியாவிலைக் கடைகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து முழு கரும்பு மற்றும் 21 வகையான பரிசு பொருட்களின் பைகளை மக்கள் வாங்கினர். பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 937 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் செய்துள்ளனர்.