டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இபிஎஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் சந்தித்தனர். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது என்றும் அண்ணாமலை - இபிஎஸ் கருத்து மோதல் குறித்தும் மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரம் கூறுகிறது. இந்த சந்திப்பின் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகியுள்ளது என்றும் அதிமுக - பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் குழப்பங்களைத் தவிர்க்க முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்ய அதிமுகவிடம் பாஜக கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த விவாதம் குறித்தும், ஆலோசனை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தரப்பினர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் முட்டல் மோதல்கள் இருந்தது. அண்ணாமலை குறித்த கேள்விக்கு அவரை பற்றியெல்லாம் கேட்காதீங்க நாங்க மேல உள்ள அவங்க பாஸ் மோடி, அமித்ஷா, நட்டா உடனே பேசிக்கொண்டிருக்கிறோம்' என காட்டம் காட்டியிருந்தார் எடப்பாடி. இந்நிலையில் அண்ணாமலை மற்றும் எடப்பாடி தரப்பு ஒன்றாக அமித்ஷா உடன் நடத்திய டெல்லி ஆலோசனை பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.