கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்பவரின் மகன் சந்திரசேகர்(28). இவர், நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கார் சிலை அருகில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதே கருணாபுரத்தைச் சேர்ந்த சோழன் என்பவரின் மகன் மணிகண்டன்(22). இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் அறிமுகம் இருந்துள்ளது.
அப்போது அங்கு நின்றிருந்த வயதான முதியவர் ஒருவர், மணிகண்டனிடம் தன்னை அவரது இரு சக்கர வாகனத்தில் பேருந்து நிறுத்தம் வரை கொண்டு சென்று விடுமாறு லிஃப்ட் கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன், மறுத்ததோடு பெரியவரை அருவருப்பான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்த சந்திரசேகர், மணிகண்டனிடம் பெரியவரை திட்டியது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் மணிகண்டன் சந்திரசேகர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரித்துள்ளனர். அங்கிருந்து கோபத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், சிறிது நேரத்தில் மீண்டும் அதே இடத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த சந்திரசேகரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்திரசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரிடம் சென்று விசாரணை நடத்தினர். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.