மதுரையில் தேவர்ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அண்மையில் நடந்த நடிகர் விஜய்யின் கட்சி மாநாட்டில் மற்ற கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஒருவேளை வாய்ப்பு இருந்தால் நீங்களும் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்குமா?' எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய விஜய பிரபாகரன், ''தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறேன். முதல்முறை குருபூஜைக்கு நான் வந்து கலந்திருக்கிறேன். நீண்ட வருடங்களுக்கு முன்பு அப்பாவுடன் உடன் வந்திருந்தேன். இந்த முறை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குருபூஜையில் என்னை கலந்துகொள்ள அனுப்பி வைத்தார். மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்ற பொழுது ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்ற பொழுது ஐயாவை வணங்கி தான் என்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். பிறந்தநாளும் நினைவுநாளும் ஒரேநாளில் இருப்பதால் இந்த நாளில் அவரை தரிசிக்க வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். விஜய் அவர் ஒரு கட்சியை ஆரம்பித்து அதற்கான விளக்கங்களை சொல்லி இருக்கிறார். மாநாடுதான் முடிந்திருக்கிறது. இன்னும் பல நாட்கள் அவர்கள் உழைக்க வேண்டும்''என்றார்.