மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரின் பேரனும் தற்போதைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இதுவரை தி.மு.க வில் எந்த பொறுப்பிலும் இல்லை. கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி யின் மேலான்மை இயக்குனாக மட்டும் இருந்து வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்தார்.
மறைந்த தலைவர் கலைஞரின் தொகுதியான திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதியை களமிறக்க அவரின் குடும்பத்தினர் விருப்பமாக இருந்தது. ஆனால் அது தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும் என அந்த முடிவுக்கு தடை விதித்தார் தி.மு.க. தலைவரும் உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற உதயநிதிக்கான முக்கியத்துவம் கூடியது. சென்ற மாதம் நிகழ்ந்த கலைஞர் பிறந்த தினமான ஜீன் 3 லேயே உதயநிதிக்கு தி.மு.க.வின் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் வெகுவாக எழுந்தது. குடும்பத்தினர், கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை உதயநிதிக்கான குரல்கள் வலிமையாக ஒலித்ததால் தந்தையும் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் உடனே பதவியை அறிவிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் உதயநிதியின் அம்மாவான துர்கா ஸ்டாலின் விருப்பத்தையும் ஏற்று தி.மு.கழக இளைஞர் அணி மாநில செயலாளராக இன்று 4.7.19 அறிவிப்பது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்தது. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என அறிவிப்பு கொடுக்கிறது.
ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த வெள்ளகோயில் சாமிநாதன் சென்ற மாதத்திலேயே கட்சி தலைமையிடம் ராஜினாமா கடிதமும் இப்பொறுப்பிற்கு உதயநிதியை பரிந்துரைத்து பரிந்துரை கடிதமும் கொடுத்திருந்தார். தனது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்த சாமிநாதனுக்கு உதயநிதிக்கு பதவி அறிவிக்கப்படுவது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட சாமிநாதன் 4ந் தேதி மதியம் சென்னைக்கு சென்றுள்ளார். முறைப்படி இளைஞர் அணி பொறுப்புக்களை சாமிநாதன் உதயநிதியிடம் ஒப்படைக்கிறார்.
கலைஞர் குடும்பத்தில் தொடங்கப்பட்ட இளைஞர் அணி பதவி பொறுப்பு மீண்டும் கலைஞரின் மூன்றாம் தலைமுறையான பேரன் உதயநிதிக்கே வந்துள்ளது.