கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், மாவட்ட காவல்துறையினர் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் இன்று (20-06-24) கூடியது. முதல் நாள் கூடிய கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.