தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று (12.02.2024) காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்னர் ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். இதனை மீறும் வகையில் சட்டமன்ற பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை ஆளுநர் ஆர்.என். ரவி மரபுகளை மீறி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிகளை ஆளுநர் ஆர்.என். ரவி மீறி உள்ளார் இது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக சட்டபேரவை இன்று கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்ப்ட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சரகள் பதிலுரை அளித்து வருகின்றனர்.