பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக செல்கின்றனர். ஆனால் அக்கோவிலின் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது எப்பொழுது உடைக்கப் படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார்.
இதனால் காவல் துறையினர் 'இரு பிரிவினரிடையே கலக்கத்தை தூண்டிவிடுதல், ஒற்றுமையை சீர் குலைத்தல்' போன்ற பிரிவின் கீழ் அவரின் மேல் வழக்கு பதிவு செய்தனர். முன் ஜாமீன் கேட்டும் அவருக்கு கிடைக்காத நிலையில், தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் புதுச்சேரியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அவரின் ஜாமீன் மனுக்கள் எழும்பூர் நீதி மன்றத்திலும் முதன்மை அமர்வு நீதி மன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் உயர்நீதி மன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மீண்டும் இது போல் பேச மாட்டேன் என பிரமானப் பத்திரத்தில் கனல் கண்ணனிடம் கையெழுத்து வாங்கி அதை எழும்புர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் 4 வார காலங்களுக்கு காலை மாலை இருவேளைகளிலும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.