அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “மின்சார கட்டண உயர்வு இந்த அரசின் சாதனை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கரை ஆண்டு காலம் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல் என இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது, இரண்டு ஆண்டுகள் கொரோனா பிடியிலே தமிழகம் சிக்கித் தவித்த போது மக்களோடு மக்களாக நின்று முன்னாள் முதல்வர் எடப்பாடியார் மற்றும் அப்போதைய அமைச்சர்களும், கழக நண்பர்களும் மக்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதியில் கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரையில் எந்த வரி உயர்வும் ஏற்றப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வரி உயர்வு 150% வரை உயர்த்திய அரசு தான் இந்த திமுக அரசு. குடிநீர் வரி இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. காலிமனை வரி, குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியது இந்த திமுக அரசு.
தற்பொழுது மின்சார கட்டணம் 52% உயர்த்திய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மூன்று மாவட்டங்களில் கருத்து கேட்கக் கூட்டம் நடத்திவிட்டார்களாம். அதில் 90% மக்கள் மின்சார கட்டணம் உயர்த்துவது ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என கூறி வருகிறார்கள்.
தற்பொழுது ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வருகிறோம் என கூறி வருகின்றனர். ஸ்மார்ட் மீட்டரில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே செந்தில் பாலாஜி இன்று வரை பதவியில் வைத்துள்ளனர். 2 கோடி மின் மீட்டர் விலை ரூ.2000 முதல் ரூ.4000 வரை இருக்கும். ஆனால் ரூ. 6000 கோடி என்று விலை நிர்ணயம் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி செய்தால் ரூ. 6000 கோடி இமாலய ஊழல் செய்யக்கூடிய அமைச்சராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பார்” என்று பேசினார்.