மதவெறியைத் தூண்டும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்து வாய்க்கொழுப்புடன் பேசிவரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக்கூட்டம் எம்.உடையப்பன் தலைமையில் புதன்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தையும் காவல்துறையையும் நா கூசும் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இதன் காணொலி காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து திருமயம் போலீசார் எச்.ராஜாவின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருவதூகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வழக்குப் பதிவு செய்த அடுத்த நாளே திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா கலந்துகொண்டதோடு இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்கள் வீட்டுப் பெண்களையும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். தனிப்படை அமைத்து தேடிவருவதாக சொல்லும் காவல்துறை அந்தப் பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கியது. இதுதான் எடப்பாடி அரசின் காவல்துறை லட்சணம்.
அதே நேரத்தில், எச்.ராஜாவின் பொறுப்பற்ற பேச்சைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சியின் சார்பில் பொன்னமராவதி, அரிமளம் உள்ளிட்ட இடங்களில் உடனடியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எவ்வளவு நிர்பந்தப்படுத்தியும் மோடியின் பினாமியாகச் செயல்படும் எடப்பாடி அரசு எச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
இந்நிலையில், எச்.ராஜாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக எச்.ராஜாவின் வாய்க்கொழுப்பான பேச்சைக் கண்டித்தும், உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்ற ஒருவார காலத்திற்கு தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது எனவும், அதன் பிறகும் நடவடிக்கை இல்லையென்றால் அடுத்த கட்டமாக மறியல் உள்ளிட்ட வடிவங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவதும் எனவும் மாவட்டக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.