தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் எனப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பது குறித்து, கர்நாடக மாநிலத்தில் உள்துறை செயலராகப் பணியாற்றும் ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், "பட்டாசு வெடிப்பது இந்து மதத்தின் வழக்கம் கிடையாது. வேதங்களிலோ புராணங்களிலோ பட்டாசு வெடிப்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஐரோப்பியர்கள் மூலம்தான் நமக்கு பட்டாசு அறிமுகமானது" எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு, 'ட்ரூ இந்தாலஜி' எனும் அமைப்பினர், "பட்டாசு வெடிப்பது இந்து புராணங்களில் உள்ளது எனச் சில குறிப்புகளோடு" கூறினர். இதையடுத்து, இந்த அமைப்பின் பக்கம் முடக்கப்பட்டது.
ரூபாவின் இந்தப் பதிவிற்கும், அவரின் பதிவை விமர்சித்த 'ட்ரூ இந்தாலஜி' அமைப்பின் பக்கம் முடக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சமீபத்தில் #ShameOnYouIPSRoopa என்ற ஹாஷ் டேக் ட்விட்டரில் திடீர் ட்ரெண்டானது. மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. நடிகை கங்கனா ரனாவத் உட்பட பலர், இந்து மதத்திற்கு நீங்கள் அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் கருத்துக் கூறிய ரூபா, "ட்விட்டருக்கு அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சட்டங்களை மதிப்பது என்னைப் போன்ற அரசு அதிகாரிகளின் கடமை. அரசின் முடிவைப் பின்பற்ற வேண்டாம் என நான் சொல்வேன் என்று நினைத்தால், அது நடக்காது." இவ்வாறு தெரிவித்துள்ளார்