டாஸ்மாக் கடைகளில் அண்மைக் காலமாகவே மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மதுக்கடைகளுக்குக் கண்காணிப்பு கேமரா பொருத்துவது; கணினி வழி ரசீது வழங்குவது; கட்டுப்பாட்டு அறை அமைப்பது; மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழு அமைப்பது; கூடுதல் விற்பனைக்கு மது விற்பதைத் தவிர்ப்பது; புதிய அளவுகளில் மது விற்பனை செய்வது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக டாஸ்மாக்கை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட ரெயில்டெல் நிறுவனத்திடம் ரூ.294 கோடி மதிப்பிலான ஆர்டரை தமிழக அரசு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.