சென்னை கோட்டூர் 172வது வட்டத்திற்குட்பட்ட, ஏரிக்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு மைதானத்தின் பக்கவாட்டில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த நவம்பர் மாதம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த நாள் முதல் தற்போது வரை மூன்று மாதங்களாகியும் சரிசெய்யபடாமல் மாநகராட்சி அதிகாரிகள் ஆழமான, ஆபத்தான பகுதி, யாரும் இங்கு இறங்க வேண்டாம் மீறுபவர்கள் காவல்துறை வசம் ஒப்படைப்படும் என எழுதி பெயர் பலகையை வைத்துள்ளனர். விளையாட்டு மைதானத்தின் அருகில் பிர்லா கோளரங்கம் உள்ளது. இதனை கூட கருத்தில் கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது பிர்லா கோளரங்கத்தின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
மைதானத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததன் காரணத்தினால், இதனை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுச் சுவர் இல்லாததால் தான் சமூக விரோதிகள் மைதானத்தினுள் ஊடுருவுகின்றனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவரை சரி செய்து தர சிறுவர்களும், இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.