ஆத்தூர் அருகே, பள்ளி மாணவியை கதற கதற கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, தலையை துண்டித்து நடு சாலையில் வீசிவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 22, 2018ம் தேதி (திங்கள் கிழமை) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த அவருடைய மகள் ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று தினேஷ்குமார் கையில் அரிவாளுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் தலை முடியைப் பிடித்து தூக்கினார். சின்னப்பொண்ணு தடுக்கச் சென்றபோது, அவரை ஆக்ரோஷமாகப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, சிறுமியை கதற கதற கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பிறகு, ஆவேசமாக தலையை மட்டும் தனியாக துண்டித்துக்கொண்டு, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று நடு சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் கேசவன் மற்றும் காவலர்கள், நிகழ்விடம் விரைந்து சென்றனர். தலை வேறு, உடல் வேறாக கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரத்தில், ரத்தம் தோய்ந்த உடையுடன் வீட்டுக்குள் வந்த தினேஷ்குமாரை அவருடைய மனைவி சாரதா, கையும் களவுமாகப் பிடித்து, இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
காவல்துறையிடம் சாரதா கூறுகையில், ''வரும் வழியில் என் பெயர் என்ன என்றும், எங்கள் குழந்தையின் பெயர் என்ன என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். திடீரென்று அவராகவே பேசுகிறார். அவர் நிதானமாகவே இல்லை. வீட்டில் தனியாக இருக்கும் என் குழந்தையையோ அல்லது எங்களையோ ஏதாவது செய்து விடுவார் என்பதால் காவல்துறையில் ஒப்படைக்க கூட்டி வந்தேன்,'' என்றார்.
நெல் அறுவடை இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமார் கடந்த சில நாள்களாக புத்தி பேதலித்தவர்போல இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்குப் போன இடத்தில், திடீரென்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்து கொண்டதால், இயந்திர உரிமையாளர் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டதும் தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார், சம்பவத்தன்று மாலையில்தான், தினேஷ்குமார் வீட்டுக்குச் சென்று பூக்கட்டுவதற்குத் தேவையான நூல்களை வாங்கி வந்ததாகக் கூறியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் எதற்காக சிறுமியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார்? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.