சிதம்பரத்தில் திருட்டு நகை வாங்கி உருக்கியதாக 3 பேரை ஈரோடு போலீஸார் சனிக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், இதனை கண்டித்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு பகுதியில் உள்ள நீதிபதியின் வீட்டில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ 45 லட்சம் பணம் கடந்த ஒரு வாரத்தில் முன்பு திருடு போகி உள்ளது பின்னர் இது குறித்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட திருடனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணையில் திருடியது ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஈரோடு காவல்துறையினர் (cr. no. 181/24) குற்ற வழக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பின்னர் நகைகளை சிதம்பரத்தில் உள்ள நகை வியாபாரிகளிடம் குறைந்த விலையில் விற்பனை செய்ததாக நகையைத் திருடியவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பெயரில் ஈரோடு காவல்துறையினர் சனிக்கிழமை காலை முதல் சிதம்பரத்தில் நோட்டமிட்டு சிதம்பரத்தில் நகைக்கடைகள் உள்ள காசு கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளவர்கள் மற்றும் நகையை உருக்கி தங்கக் கட்டிகளாக விற்பனை செய்பவர்களாக உள்ள , கலியமூர்த்தி மகன் சி.கே.முருகன், பாபுராவ் சேட் மகன் மோகன் பாபு, மாரியப்பன் மகன் சிவக்குமார், நகைகளை வாங்கும் புரோக்கர் ரமேஷ் ஆகிய 4 பேரை சனிக்கிழமை விசாரணைக்கு ஈரோடு அழைத்து சென்றார்கள். இதையடுத்து நகை வியாபாரிகள் சங்கத்தினர் தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் அழைத்து சென்றதை கண்டித்து நகை கடைகளை அடைத்து விட்டு சனிக்கிழமை இரவு மேலரத வீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி பி.ரகுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் வாபஸ் பெறப்பட்டு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மறியல் போராட்டத்தினால் நான்கு வீதிகளிலும் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 நிமிடமாக சாலையில் காத்திருந்த பொதுமக்கள் திருட்டு நகை வாங்கி வியாபாரம் செய்பவர்களுக்கு சிதம்பரம் நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதுபோன்று கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிப்பதால் இது போன்ற திருட்டு அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சிதம்பரம் நகை வியாபாரிகள் திருட்டு நகையை வாங்குபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே இதற்காக நாம் சாலையில் காத்துக் கிடக்கிறோமே என தலையில் அடித்துக் கொண்டனர்.