2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ. 1.088 கோடி செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
அந்தப் பொங்கல் தொகுப்பில், பச்சரிசி - 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை - 50 கிராம், பாசிப் பருப்பு -1/2 கிலோ, நெய் - 100 கிராம், ஏலக்காய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய்த் தூள் - 100 கிராம், கடலைப் பருப்பு - 1/4 கிலோ, மிளகு - 50 கிராம், சீரகம் - 100 கிராம், கடுகு - 100 கிராம், புளி - 200 கிராம், உப்பு - 1/2 கிலோ, கோதுமை மாவு - 1 கிலோ, மல்லித் தூள் - 100 கிராம், ரவை - 1 கிலோ, உளுத்தம்பருப்பு - 1/2 கிலோ, கைப்பை-1 மற்றும் முழுக் கரும்பு-1 ஆகியவை வழங்கப்பட்டன.
சில இடங்களில் பொங்கல் தொகுப்பு தரமானதாக இல்லை என அப்போது புகார்கள் எழுந்தன. அதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு வழங்கிய பொங்கல் தொகுப்பு தரமானதாக இல்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது அதன் காரணமாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரை லோக் ஆயுக்தா அமைப்பு கடந்த மார்ச் மாதம் நிராகரித்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில், “அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றதாகவும், உயிரிழந்த பூச்சிகள் அதில் காணப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கியதின் மூலம் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக முதலமைச்சருக்கு புகார் அளித்தேன். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டும், தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தேன். அந்தப் புகாரை லோக் ஆயுக்தா நிராகரித்துவிட்டது” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி என். சேஷசாயி, புகாரை நிராகரித்த லோக் ஆயுக்தா உத்தரவை ரத்து செய்தார். மேலும், மனுதாரரின் புகாரை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.