Skip to main content

“என்.எல்.சி. நிறுவனத்தால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்” - உயர் நீதிமன்றம் 

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Compensation for crops damaged during NLC work is 40 thousand to be provided High Court

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த ஜூலை 26, 27 ஆம் தேதி என இரு நாட்கள் நடைபெற்றது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்தச் சூழலில் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவசாயி முருகன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி. பாதுகாக்கத் தவறிவிட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை என்.எல்.சியால் பயன்படுத்த சில காலம் ஆகும் என்பதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் பயிரிட்டதும் தவறுதான். இந்த சம்பவத்திற்கு இரு தரப்பினரும் பாதிக்குப் பாதி பொறுப்பாவார்கள். அதே சமயம் நிலத்தின் உரிமையாளர்கள் சட்டம், ஒழுங்கைப் பாதிக்கும் எந்தச் செயலிலுல் ஈடுபடக்கூடாது. அதனையும் மீறி ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன். அதே சமயம் என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.  இந்தத் தொகையை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்