ராமேஸ்வரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வீட்டு வரி விதிப்புக்கு மனு செய்தாலோ, சொத்துவரி, தொழில்வரி மற்றும் புதிய கட்டிட அனுமதிக்காக மனு செய்தாலோ. பயனாளர்களை அலையவிடும் போக்கு உள்ளதாகவும், மேலும் ₹ 10,000, முதல் பல லட்சம்வரை லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் அருகே கோடாங்கி அடித்து மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எஸ்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நூதனப்போராட்டத்தில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் மற்றும் சி.பி.ஐ.யின் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நகராட்சி அலுவலகம் முன்புள்ள மரத்தில் வைக்கப்பட்டிருந்த பேய் பொம்மை முன்பு படையலிட்டு, எலுமிச்சம்பழங்களை வெட்டி, உடுக்கு அடித்து, வேப்பிலை அடித்து பேய்விரட்டுவது போல் போராட்டம் நடத்தினர். பின்னர் லஞ்சத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி கமிஷனர் மூர்த்தி மற்றும் பொறியாளர் சக்திவேல் ஆகியோரிடம் மனு அளித்தனர்.