மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்துவந்த நிலையில், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 60 விவசாயிகள் போராட்டக் களத்திலேயே பலியாகி உள்ளனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் 8 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், சட்டம் திரும்பப் பெற்றால் மட்டுமே வீட்டுக்கு போவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் நகரச் செயலாளர் தமிழ்மாறன் முன்னிலையில் அக்கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சட்டத்தை ஆதரிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டதுடன் வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனர். தொடர்ந்து "மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை எரித்து போகி கொண்டாடுவோம்" என்று சட்ட நகலை எரித்தனர்.