கம்யூனிச கொள்கைகளை விதைத்து அதை இயக்கமாக உருவாக்கி, அதிலும் நமது தமிழ் மண்ணில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை ஏற்படுத்தி அதன் நிர்வாகியாகச் செயல்பட்ட சி.எஸ்.சுப்பிரமணியம், தனது சொந்த நிலத்தை தன் மரணத்திற்குப் பிறகு 'தத்துவப் பள்ளி' அமைக்க உயில் எழுதியிருந்தார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கட்சிக்கு தானமாக வழங்கிய 31 சென்ட் நிலத்தில், இன்று (18.09.2020) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தத்துவார்த்த பயிற்சிப் பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சி.எஸ்.சுப்பிரமணியம் பற்றிய சிறு அறிமுகம், தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் என்ற கிராமம்தான், சி.எஸ்.சுப்பிரமணியத்தின் பூர்வீகம். இவர்களின் குடும்பம் செல்வ செழிப்பானது. இவரது அப்பா சுந்தரம் அய்யர், அப்போதே மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர். பிறகு அவர் சென்னை சைதாபேட்டையில் இயங்கிவந்த கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1910 ஜுன் 16 இல் சுந்தரம் அய்யருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் சி.எஸ்.சுப்பிரமணியம், சென்னை மாநில கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சர்வதேச அளவில் உயர் கல்வியான ஐ.சி.எஸ் படிக்க லண்டனுக்கு தனது மகன் சி.எஸ்.சுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தார் அவரது அப்பா. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் முதுநிலை கலை பட்டம் பெற்ற சி.எஸ்.சுப்பிரமணியம், மார்க்சீய நூல்கலை அதிகம் படித்தார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'டெய்லி வொர்க்கர்'-இல் பணியாற்றியதோடு ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றார்.
லன்டனில் உள்ள இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து, இந்திய மாணவர் அமைப்பை ஏற்படுத்தினார். இந்தியாவில், இப்போது முதல் தேவை, நாடு சுதந்திரம் பெற வேண்டும். அடுத்து, கம்யூனிச அமைப்பின் அதிகாரம் நிறுவ வேண்டும் என உறுதி பூண்டு அந்த நோக்கத்தில் பயணித்தார். அப்போதுதான், லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தி சென்றிருக்கிறார். சி.எஸ்.சுப்பிரமணியம் காந்தியடிகளைச் சந்தித்துப் பேசினார். பிறகு, சி.எஸ்.சுப்பிரமணியம் ஒருங்கிணைத்த, லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் கூட்டத்தில் காந்தியடிகள் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.எஸ் படிக்க போன மகன் பட்டத்துடன் திரும்புவான் என அவரது பெற்றோர் எதிர்பார்க்க ஐ.சி.எஸ் பட்டமில்லாமல் சென்னை திரும்பிய சி.எஸ்.சுப்பிரமணியம் "நான் மிகப் பெரிய பட்டம் பெற்றுள்ளேன் ஆம் நான் ஒரு கம்யூனிஸ்ட்" என அவர்கள் குடும்பத்தை வியக்க வைத்துள்ளார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் மூலவர்களான பாஷ்யம், அமீர்ஹைதர்கான், சிங்காரவேலர் என பல தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. மேலும், முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை, சென்னையில் தொடங்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார் சுப்பிரமணியம். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் போடப்பட்ட சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சி.எஸ்.சுப்பிரமணியம் இரு வருடம் சிறையில் இருந்தார். சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் அமைப்பு, கட்சி பத்திரிகையில் பணி புரிந்தது என முழுமையான செயற்பாட்டாளராக இருந்த அவர் எந்த இடத்திலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் இருந்துள்ளார்.
இந்திய அளவில் ஏராளமான தலைவர்களோடு தொடர்பில் இருந்தும் அவர் எந்தப் பதிவையும் வெளியிட்டதில்லை. அவருடைய குடும்ப வாழ்வைப் பற்றியும் முழுமையான தகவல் இல்லை. நீண்ட காலம் அவரைப் பற்றிய செய்தி இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில்தான், ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக நா.பெரியசாமி பொறுப்பு வகித்தார். அப்போது, அவர் சி.எஸ்.சுப்பிரமணியத்தை நேரில் சென்று சந்தித்து, அவர் கோபிசெட்டிபாளையத்தில் இருப்பதை உறுதிசெய்து கட்சித் தலைமைக்கு தகவல் கூறினார். அதன் பிறகுதான், சி.எஸ்.சுப்பிரமணியம் கோபிசெட்டிபாளையத்தில் இருப்பதை தலைமை உறுதிப்படுத்தியது.
அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ப.மாணிக்கம் உள்ளிட்ட தலைவர்கள் சி.எஸ்.சுப்பிரமணியத்தோடு, நா.பெரியசாமியை தொடர்பில் இருக்க அறிவுறுத்தி இருந்தனர். சி.எஸ்.சுப்பிரமணியத்தின் மனைவி ஒரு மருத்துவர். கோபிசெட்டிபாளைய மக்களுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்கி மருத்துவச் சேவையைச் செய்து வந்தார். இந்நிலையில், சி.எஸ்.சுப்பிரமணியத்தின் மனைவி இறந்துவிட, அதே வீட்டில் சி. எஸ்.சுப்பிரமணியம் மட்டும் வசித்து வந்தார். இந்தச் சமயத்தில்தான் முன்னாள் எம்.எல்.ஏ.வான நா.பெரியசாமி தமிழக கட்சித் தலைமைக்கு அவரைப் பற்றிய தகவலைக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாகவே, 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வசித்த தகவல் தெரிந்து, மாவட்டச் செயலாளர் நா.பெரியசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, டி.ராஜா, தா.பான்டியன், சி.மகேந்திரன் போன்றோர் நேரில் சென்று அவரைச் சந்தித்தனர். உங்களைப் பற்றி சொல்லுங்கள் அது இந்திய தேசத்தின் வரலாறு என பல தலைவர்கள் அவரிடம் கேட்டும் என்னைப் பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. நான் ஒரு கம்யூனிஸ்டாக வேலை செய்தேன், நீங்களும் கம்யூனிஸ்ட்டாக பணி செய்யுங்கள். என்றே கூறியிருக்கிறார். சில முயற்சிக்குப் பிறகு மூத்த தலைவர் ஆர்.என்.கே ஏற்பாட்டில் சி.எஸ்.சுப்பிரமணியம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு அம்பத்தூர் என்.சி.பி.ஹெச் காலனியில் வாழ்ந்தார். 2011 இல் தனது 102 ஆவது வயதில் மறைந்தார்.
நீண்ட தேடலுக்குப் பிறகு 2001 -இல் சி.எஸ்.சுப்பிரமணியத்தை கோபிசெட்டிபாளையம் வீட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்தபோது அவர், "நான் உயிருள்ளவரை கம்யூனிஸ்ட்தான். எனக்குப் பிறகு, நான் இருக்கும் இந்த இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான். இதை முன்பே உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்த இடத்தில் கட்சியின் தத்துவார்த்த கல்வி படிப்பகம் நடத்துங்கள்" எனக் கூறியிருக்கிறார். அப்படி சி.எஸ்.சுப்பிரமணியம் வழங்கிய 31 சென்ட் நிலத்தில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த கல்விக் கட்டிடம், 'சி.எஸ்.நினைவரங்கம்' என்ற பெயரில், ரூபாய் 5 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பான்டியன் தலைமையில் முத்தரசன், சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.