
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்ட அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கீரமங்கலத்தில் பாராட்டு விழா நடந்தது. அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகி உள்ள, அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த கீரமங்கலம், மாங்காடு, தாந்தாணி உள்ளிட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ‘அணவயல் அறம் அறக்கட்டளை’ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னசாமி தலைமையில், கீரமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைமாணிக்கம், தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், மாரிமுத்து, ஆடிட்டர் வைத்திலிங்கம், செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜயாவுதீன் ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடந்தது.
அறக்கட்டளைத் தலைவர் கணேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தினகரன், டாக்டர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
விழாவில் டாக்டர் சதீஷ் பேசும் போது, “அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு சிறு தடையாக இருக்கும். ஆனால், அது போகப் போகச் சரியாகிவிடும். எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். தயங்காமல் உதவிகள் கேட்கலாம். உங்களைப் பார்த்து உங்களுக்கு அடுத்து பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆக வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்றார்.
மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் தினகரன் பேசும் போது, “ஒரே பகுதியில் இருந்து இத்தனை கிராமப்புற மாணவர்களை உருவாக்கி, மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புகின்ற ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் முதலில் பாராட்டுகிறேன். உங்களுக்கு முதல் ஆண்டில் சில சவால்கள் இருக்கும். அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். கிராமப் புறங்களில் இருந்து அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் நீங்கள், ஒவ்வொருவரும் கிராமப்புறங்களில் சேவைசெய்ய முன்வர வேண்டும். பலர் முதல் மதிப்பெண் எடுத்தவுடன் மருத்துவராகி கிராம மக்களுக்குச் சேவை செய்வேன் என்று பேட்டி கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் படிப்பு முடிந்தபிறகு கிராமங்கள் வேண்டாம் என்று போய்விடுகிறார்கள். நீங்கள் அப்படி இருக்கக் கூடாது” என்றார்.

அறக்கட்டளைத் தலைவர் கணேசன் பேசும் போது, “புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சாதிக்கும் மாணவர்கள் அதிகம். அதில் யாரும் ஆட்சிப் பணிக்குத் தயாராகவில்லை. அதனால், நீங்கள் மருத்துவம் படித்தாலும் கூட மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற இடங்களுக்கு வரவேண்டும்” என்றார்.