திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மத்தியரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்கள் பதிவு சட்டம் போன்றவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகின்றன. அதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 5ந்தேதி தமிழகம் முழுவதும் கல்லூரிகள் முன் திமுகவின் மாணவரணி அமைப்பு நிர்வாகிகள், சென்று கையெழுத்து கேட்டனர். மாணவ – மாணவிகள் ஆர்வமுடன் வந்து கையெழுத்திட்டனர்.
திருவண்ணாமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் திருவண்ணாமலை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காலேஜ் கு. ரவி தலைமையில் கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் எ.வ.கம்பன் சிறப்பு அழைப்பாளராக சென்று மாணவ – மாணவிகளிடம் கையெழுத்து கேட்டனர். இங்கு மாணவர்களை விட மாணவிகள் ஆர்வமாக வந்து வரிசையில் நின்று மத்தியரசின் சி.ஐ.ஏ, என்.ஆர்.சி க்கு எதிராக வரிசையில் நின்று கையெழுத்திட்டனர்.
இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாணவிகள் அதிகளவில் எதிர்ப்பு தெரிவிப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சுமார் 200க்கும் அதிகமான மாணவிகள் மற்றும் மாணவர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடதக்கது.