கொல்லிமலை அருகே, பூட்டிய வீட்டுக்குள் கல்லூரி மாணவர் தூக்கில் சடலமாகக் கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம். இவருடைய மனைவி புஷ்பா. இவர்களுடைய மகன் வல்லரசு (20) பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.
செல்லம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் மரணத்திற்குப் பிறகு புஷ்பா, வேலை தேடி கேரளாவுக்குச் சென்று விட்டார். அங்குள்ள ஒரு எஸ்டேட்டில் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவருடைய மகன் வல்லரசு மட்டும் தொடர்ந்து பரமத்தி வேலூரில் உள்ள கல்லூரியிலேயே, அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரி விடுமுறை நாள்களில் வல்லரசு சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் வல்லரசுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்து, மனைவியைக் கண்டித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் அரசல் புரசலாக உள்ளூர்காரர்களுக்கும் தெரிய வந்தது. இதனால் அவமானம் அடைந்த வல்லரசு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் செங்கரை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். வல்லரசுவின் உடலை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் ஒருவருடன் தவறான தொடர்பு இருந்ததால், வல்லரசுவின் மரணத்திற்கு அந்தப் பெண் அல்லது அவருடைய கணவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.