கல்விக் கட்டணம் செலுத்தாததைச் சுட்டிக்காட்டி கல்லூரி முதல்வர் தகாத சொற்களால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 12- ஆம் வகுப்பில் 450 மதிப்பெண்களை எடுத்ததால், கட்டணமின்றி கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக, கல்லூரி நிர்வாகம் கூறியதால் அவர், அந்த கல்லூரியில் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கல்லூரி முதல்வரின் உதவியாளர் சிவா என்பவர், தன்னிடம் பேச வேண்டும் என மாணவியை வற்புறுத்தியதாகவும், தொலைபேசி எண்ணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சக மாணவர்களோடு மாணவி பேசியதைத் தவறாக சித்தரித்து, கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் மாணவியை அழைத்து கல்லூரி முதல்வர் கண்டித்த போது, கல்விக் கட்டணம் செலுத்தாததையும் சுட்டிக்காட்டி, மாணவியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பாலியல் ரீதியாக தொந்தரவுக் கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரி முதல்வர் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.