கல்லூரியில் படிப்பவர்கள் சிலர், எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, காதல் மற்றும் காமம் சார்ந்த நடவடிக்கைகளில் முடிந்தமட்டிலும் ஈடுபடுகின்றனர்; கொண்டாடவும் செய்கின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தெல்லாம், அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
காதலோ, கத்தரிக்காயோ, அவசரகதியில் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியில் வந்தால், என்னென்ன கஷ்டங்களை அவள் சந்திக்க நேரிடும் என்பதை திரைப்படங்களில் காட்டுகிறார்கள். கதை, கட்டுரைகளில் எழுதி வருகிறார்கள். ‘இப்படிச் செய்ததால், இவள் கதி என்னவாயிற்று தெரியுமா?’ என்று செய்திகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். ஆனாலும், தவறுகள் நடந்த படியே இருக்கின்றன. விருதுநகர் மாவட்டம் – சாத்தூரில் இப்படி ஒரு அதிர்ச்சி அனுபவத்தைச் சந்தித்திருக்கிறாள் பாண்டிச்செல்வம் என்ற கல்லூரி மாணவி. ‘மாணவர்களின் வேலை வாய்ப்பை மட்டுமே குறிகோளாகக் கொண்ட ஒரே கல்வி நிறுவனம்’ என்று போர்டு மாட்டி, எஸ்.கே.எஸ். கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார் சையது இப்ராகிம். இவர் த.மா.கா. மாவட்ட பொதுச்செயலாளரும் ஆவார்.
இந்தக் கல்லூரியில் நர்சிங் முதலாமாண்டு படிக்கிறாள் பாண்டிச்செல்வம். 12-ஆம் தேதி, கல்லூரிக்குச் செல்லாமல், யாருக்காகவோ சாத்தூர் பேருந்து நிலையத்தில் அவள் காத்திருந்தாள். மதியம் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை, 19 வயதே ஆன இளம்பெண் ஒருத்தி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது, வக்கிரபுத்தி கொண்ட ஆண்களின் பார்வையிலிருந்து தப்ப முடியுமா? வெள்ளரிக்காய் விற்கும் வன்னிமடையைச் சேர்ந்த மாரிமுத்துவுக்கு சபலம் தட்டியது. நைஸாக பேச்சுக்கொடுத்து, பெரிய கொல்லபட்டி காட்டுக்குள் அவளை அழைத்துச் சென்றான். அங்கே, அவளிடம் பாலியல் அத்துமீறலை நடத்திவிட்டு, பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்திருக்கும் அமீர்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிக்கும் அழைப்பு விடுத்தான். அவனும் அங்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்தான். இவ்விருவரும், அவள் கையில் 50 ரூபாய் தாளைத் திணித்து, 13-ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு விடுவித்தார்கள்.
உடல் ரீதியான பாதிப்புடன் கல்லூரி செல்ல விரும்பாத பாண்டிச்செல்வம், மீண்டும் சாத்தூர் பேருந்து நிலையத்திலேயே செய்வதறியாது உட்கார்ந்திருந்தாள். மகள் வீடு திரும்பாத நிலையில், அவளது போனும் ஸ்விட்ச்-ஆப் ஆகியிருந்ததால், எங்கெங்கோ தேடினார் அவளது தந்தை பாலகிருஷ்ணன்.
அவள் கிடைக்காததால், அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பாண்டிச்செல்வத்தின் கைபேசி எண்ணுக்கு காவல்நிலையத்திலிருந்து டயல் செய்தபோது ‘ஆன்’ ஆகியிருந்தது. பாண்டிச்செல்வம் பேசினாள். பகல் 11-30 மணிக்கெல்லாம், பேருந்து நிலையத்திலிருந்து அவளை சாத்தூர் மகளிர் காக்கிகள் அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது, மாரிமுத்துவையும், பாண்டியையும் அடையாளம் காட்டினாள் பாண்டிச்செல்வம். மகளிர் காக்கிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, “ஆமாம்மா.. எங்க காலேஜ் சேர்மன் சையது இப்ராகிமும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். ‘நீ நல்லா மார்க் வாங்கணும்ல. உன் படிப்பை நான் பார்த்துக்கிறேன்’னு சொல்லி அவரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.” என்று அழுதபடியே இரண்டு மாதங்களுக்கு முன் நடந்ததை விவரித்தாள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் ஏழ்மையையும், பலவீனத்தையும் அறிந்துகொண்டு, அவளிடம் மூன்று ஆண்கள் அத்துமீறல் நடத்தியது கண்டு ஷாக் ஆனார்கள் மகளிர் காக்கிகள்.
மாரிமுத்து, பாண்டி ஆகியோரோடு இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் எஸ்.கே.எஸ். கல்லூரி நிறுவனர் சையது இப்ராகிம்.