Published on 11/07/2018 | Edited on 11/07/2018

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிலுள்ள கிராமங்களில் யானைக்கால் நோய் பரவி பெருக, மாவட்ட நிர்வாகமோ அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது என்கின்றனர் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்.
எட்டயபுரம் தாலுகாவிலுள்ள இளம்புவனம் பஞ்சாயத்திற்குட்பட்டது இளம்புவனம், குளத்துள்வாய்பட்டி, பிதப்புரம், மாதாபுரம் ஆகிய கிராமங்கள். சுமார் 3000த்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் அடிப்படையே கூலித்தொழில் மற்றும் விவசாயம் தான். மேற்கண்ட கிராமங்களில் தற்பொழுது யானைக்கால் நோய் பெருமளவில் பரவி வருகின்றது என்பது கண்கூடான ஒன்று. யானைக்கால் நோய் என்பது பொதுவாக, சுகாதார சீர்க்கேட்டின் விளைவாக கியுலக்ஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோயாகும்.
இளம்புவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி என்பவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்கவே அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 நாட்களில் காய்ச்சல் குறைந்தது. ஆனால் வலது கால் மட்டும் வீக்கம் கொடுத்தது. இவரை போல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சண்முகையா, என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மூக்கையா, மணி, கருத்தப்பாண்டி, சௌந்தர்ராஜ் மற்றும் சண்முகவடிவு ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"இனிமேலாவது இந்த நோய் யாருக்கும் பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கி கிடக்கும் வாறுகால் கழிவுநீரை சுத்தம் செய்து, குப்பைகளை அகற்ற வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். யானைக்கால் நோய் தடுப்பு சிறப்பு முகாம் ஏற்படுத்த வேண்டும்." என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் கோரிக்கை.