நீலகிரியில் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடமே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் கல்லூரியின் முதல்வரும், இணைப் பேராசிரியர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களிடம் கல்லூரியின் முதல்வர் அருள் ஆண்டனி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்குவதற்கு அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதேபோல் அதே கல்லூரியில் தாவரவியல் இணைப் பேராசிரியராக இருந்த ரவி என்பவர் மாணவர்கள் டிபார்ட்மெண்ட் மாறுவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.