திண்டுக்கல்லில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், அவர் தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு அக்கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. மாணவிகளும் அவரை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அக்கல்லூரியின் வார்டன் அர்ச்சனா தாடிக்கொம்பு போலீசாரால் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அதேசமயம் தலைமறைவான ஜோதிமுருகன் திருவண்ணாமலையில் சரணடைந்தார். இவர்கள் இருவர் மீதும் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின் ஜாமீன் கேட்டு ஜோதிமுருகன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், ஜோதிமுருகனுக்கு இரண்டு போக்ஸோ வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி தினமும் வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.
ஆனால், அவர் அங்கு கையெழுத்துப் போடவில்லை. இந்த நிலையில், நேற்று (15.12.2021) மகிளா கோர்ட்டில் ஆஜரான ஜோதிமுருகன், “உடல்நிலை பிரச்சனை இருப்பதால் வடமதுரை ஸ்டேஷனில் கையெழுத்து போடவில்லை; வேறு இடத்திற்கு மாற்றித் தர வேண்டும்” என மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து மறுஉத்தரவு வரும்வரை தினமும் மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.