திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாவை பார்ப்பதற்காக அவரது அத்தை கல்லூரி விடுதிக்குச் சென்றார். அப்போது அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கலாவை அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு கலா கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலாவின் அத்தை, கலாவிடம் கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த தனது காதலன் ராம்குமார் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார். இந்த வாலிபர் காந்திகிராம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கலாவை அவர் தனது அண்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து கலாவின் கர்ப்பத்தை அவரது அத்தை கலைக்க முடிவு செய்தார். அதன்படி திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை இரு தினங்களுக்கு முன்பு சேர்த்தார். பின்னர் மருத்துவர்கள் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு நிற்கவில்லை. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் அரசு மருத்துவமனை வரை சென்றதால் போலீஸ் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நளினி மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமான ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது அத்தை மற்றும் கர்ப்பத்தை கலைத்த டாக்டர் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.