நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் பேராசிரியருக்கு சம்பளம் கொடுக்காத கல்லூரி பேருந்தை ஜப்தி செய்த சம்பவம் கல்லூரி அதிபர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் ஆனந்த். அவருக்கு வயது 41. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஏ.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளர். கல்லூரி நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியாக சரியான தேதிக்கு சம்பளம் கொடுக்காததால், வேறு பணிக்கு செல்வதாக சொல்லி கடந்த 2017 ம் ஆண்டு பணியிலிருந்து விலகினார்.
![clg](http://image.nakkheeran.in/cdn/farfuture/yFP2yBqeM0Ikc0Rj-RRbWL8X7VAUdlOKigp-bddrdpc/1541069664/sites/default/files/inline-images/4d7df4f7-7053-44d9-b943-42eb2fe11ffd.jpg)
அப்போது அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையைாக 27,000 ரூபாயும் தன்னுடைய பட்டயபடிப்பு தொடர்பான சான்றிதழ்களை கொடுக்கும் படி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுயிருக்கிறார். ஆனால் நிர்வாகமோ சம்பளத்தையும், சான்றிதழ்களையும் கொடுக்காமல் அலைகழித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சல் அடைந்த பேராசிரியர் ஆனந்த் 2017 ம் ஆண்டு ஜீன் மாதம் முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனே சம்பளம் வழங்க உத்தரவிட்டார்.
அதன் பிறகும் கல்லூரி நிர்வாகம் சம்பளத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன். எம்.ஏ.எம்.கல்லூரியின் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற அமீனா கல்லூரியில் நின்று கொண்டிருந்த பேருந்து ஜப்தி செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.
நீதிமன்ற உத்தரவால் பேராசிரியருக்கு சம்பளம் கொடுக்காத கல்லூரி பேருந்தை ஜப்தி செய்த சம்பவம் கல்லூரி அதிபர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட 2 கல்லூரியை தவிர மற்ற பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டுயிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது.
இதனால் நீதிமன்ற உத்தரவுபடி பாதிக்கப்பட்ட பேராசிரியார்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவார்களோ!! என்கிற பயத்தில் கல்லூரி அதிபர்கள் இருக்கிறார்கள்.