சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் ஆர்.பிருந்தாதேவி, திங்கள்கிழமை (ஜன. 29) காலை, ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மக்களவைத் தேர்தலையொட்டி ஒரே துறையில் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கார்மேகம் கல்லூரிக் கல்வித் துறை இயக்குநராக இடமாறுதல் செய்யப்பட்டார். தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் ஆர்.பிருந்தாதேவி சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
அவர், திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், சேலம் மாவட்டத்தின் 174வது ஆட்சியர் ஆவார். இரண்டாவது பெண் ஆட்சியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். டாக்டர் ஆர்.பிருந்தாதேவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு, திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
முன்னதாக அவர் அனைத்துத்துறை அலுவலர்களிடமும் கூறுகையில், ''பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்றும் கூறினார்.