திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அங்குள்ள அரசு பள்ளிகள், மக்கள் நல வாழ்வு மையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
பொதுமக்கள் சாலை வசதி சரியில்லை, நல்ல குடிநீர் கிடைப்பதில்லை, சரியான நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தெரு மின்விளக்கு சரியாக எரிவதில்லை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்து கோரிக்கை வைத்தனர். அதை எல்லாம் விரைவில் சரி செய்வதாக உறுதியளித்தார். அங்குள்ள மக்கள் நல வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை குறித்து கேட்டபோது, அங்கிருந்த கர்ப்பிணிப் பெண்களில் ஒருவர் கலெக்டரிடம் முறையான மருத்துவம் பார்க்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அங்கிருந்த மருத்துவ செவிலியர்களிடம் வருகை பதிவேடு வாங்கி பார்த்தார், நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்த முறைகளை கேட்டறிந்து கண்டித்தார். பின்னர் அங்குள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பைரப்பள்ளி அரசு துவக்க பள்ளி உதவி ஆசிரியை ஜோதி மணியை சால்வை அணிவித்து பாராட்டினார்.
மிட்டாளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து முட்டையுடன் கூடிய சத்துணவு சாப்பிட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அங்குள்ள இருளர் இன மக்கள், தங்கள் பிள்ளைகள் மேல்நிலைப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு படிக்க வசதி இல்லாமல் இருக்கிறோம், எங்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும், இருக்க சொந்தமாக வீடு இல்லாமல் புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு தங்கியுள்ளோம். அந்த வீடுகளில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவைகள் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கினார்.