ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை ஆற்காடு பகுதிகளை இணைக்கக்கூடிய பாலாற்றின் மேம்பாலத்தின் மீது சாத்தூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ரமேஷ்(37) பரிமளா(27) மற்றும் இவர்களது மகளான ஓவியா(7) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்திருந்த குடும்பத்தினரான ரமேஷ் பரிமளா ஓவியா ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மக்கள் அதிர்ச்சியாகி அவர்களுக்கு முதல் உதவி செய்ய ஓடினர்.
இந்நிலையில் அவ்வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கூட்டத்தைப்பார்த்துவிட்டு தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தவர் விபத்து என தெரிந்தௌக்கொண்டார். உடனே காரில் இருந்து இறங்கியவர் காயமடைந்த ரமேஷ், பரிமளா, ஓவியா ஆகிய மூன்று நபர்களையும் பத்திரமாக மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மருத்துவர்களிடம் காயம் அடைந்துள்ள மூன்று நபர்களின் உடல்நிலை குறித்து விசாரித்து உரிய சிகிச்சை வழங்கும்படி ஆட்சியர் தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை தனது காரில் ஏற்றுக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.