சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் ஹரிதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகர், குமார், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை பணிக்காக ஒவ்வொரு துறையும் என்ன பணிகள் செய்துள்ளது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர், “அனைத்துத் துறை அலுவலர்களும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தற்போது மாமல்லபுரம் நோக்கி புயல் நகர்வதாக வானிலை மையம் கூறி வருகிறது. அதே நேரத்தில் கடலூரை நோக்கியும் புயல் நகரும் சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துத் துறை அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பரங்கிப்பேட்டை, கிள்ளை முடசல் ஓடை, அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீட்பு உபகரணங்களை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு மீட்பு பணிகள் குறித்து அறிவுறுத்தினார். இவருடன் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி உடன் இருந்தார்.