தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வி, நடுநிலை, உயர்நிலைக் கல்வி படிக்கும் போது படிப்பை பாதியில் பல்வேறு காரணங்களால் நிறுத்தியவர்களை தேடி கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யும் பணிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை, கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பள்ளியில் இடைநின்றவர்கள் ஏன் என்றார்கள்? எதற்காக நின்றார்கள் என ஆராய்ந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா, தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 12 மாணவர்கள், 19 மாணவிகள் என 31 மாணவ மாணவிகள் இடை நின்றவர்களாக இருந்தனர். இவர்களது வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று கல்வியை தொடராமல் இடை நின்றவர்களின் பெற்றோர்களிடம், படிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து தங்களது பிள்ளைகளின் நலனுக்காக பேசுவதை உணர்ந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தனர்.
பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதி பள்ளிக்கு வந்தார். அங்கு வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறையினர் இணைந்து இடைநின்ற பிள்ளைகள் சிலரை அழைத்து வந்தனர். அவர்களை பள்ளி வகுப்பறையில் அமரவைத்து அவர்களுக்கு பாடப்புத்தங்கள், நோட் போன்றவை தந்தார். கல்வியின் தேவை, கல்வியால் சாதிக்க முடிந்தவை குறித்து விழிப்புணர்வும், அறிவுரையும் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 993 அரசு பள்ளிகளில் 1898 மாணவ மாணவியர் கல்வியை தொடராமல் இடை நின்றதைத் தொடர்ந்து, அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பொருட்டு, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களைக் கொண்டு ஆலோசனை நடத்தி, அதன் முதல் கட்டமாக இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இடை நின்ற 402 மாணவ மாணவிகளை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.