கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் தொடங்கவுள்ளதையடுத்து, திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேலோ போட்டியின் இலட்சினை மற்றும் விளையாட்டு ஜோதி உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேற்று காட்சிப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து பேசிய அவர், “இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 6வது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில், களரிச் சண்டை (களரிஃபைட்), மல்லர் கம்பம் விளையாட்டுகள் திருச்சியிலும், கூடைப்பந்து விளையாட்டுகள் கோயம்புத்தூரிலும், கட்கா மற்றும் கோகோ விளையாட்டுகள் மதுரையிலும், இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரிலும் நடைபெறவுள்ளன.
திருச்சியில் நடைபெறவுள்ள போட்டிகளில் மல்லர்கம்பம் போட்டிகள் ஜனவரி 21 தொடங்கி 24 ஆம் தேதி வரையிலும், களரிச்சண்டை போட்டிகள் ஜன 27 முதல் 29 வரையிலும் அண்ணா விளையாட்டரங்க உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளை முன்னிட்டு அவற்றை விளம்பரப்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நம் நாட்டில் இளையோர் விளையாட்டுத்துறை மூலம் பணிக்கு அமர்ந்தாலும் அதன் பின்னர் விளையாட்டுகளை தொடர்வதில்லை. வெளிநாட்டினர் அப்படியல்ல; தொடர்கின்றனர்.
எனவேதான் அவர்களால் சாதிக்க முடிகின்றது. மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகளின் போது, பார்வையாளர்களாக மட்டும் இருக்கக் கூடாது. அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். அபோதுதான் எந்தப்போட்டி நமக்கு உகந்தது என்பதை தேர்வு செய்யமுடியும். இதுவரை பங்கேற்காதவர்கள் இந்தாண்டு முதல் ஏதாவது ஒரு போட்டியிலாவது பங்கேற்க முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தாண்டு சாதிக்க முடியும். அதேபோல போட்டிகளில் தோல்வியுற்றவர்கள் வருந்தக்கூடாது. தோல்விதான் வெற்றிக்கான உந்துதல். வெற்றி பெற்ற பலரும் பல தோல்விகளுக்குப் பின்னரே முன்னிலை பெற்றுள்ளனர். தோல்வியடையாமல் யாரும் முன்னுக்கு வரமுடியாது” என்றார் இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.