சென்னையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஆசிரியை மற்றும் மாணவி ஒருவரின் மீது சிமெண்ட் பூச்சு விழுந்ததால் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல மதியம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஐந்தாம் வகுப்பு வகுப்பறையினை ஒட்டிய வராண்டா பகுதியில் மேற்கூரையில் பகுதி எதிர்பாராத விதமாக பெயர்ந்து விழுந்தது. இதில் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மற்றும் ஆசிரியை மீது விழுந்தது. இதில் தலையில் காயமடைந்த மாணவி மற்றும் ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.