வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பிரச்சாரம் ஆகஸ்ட் 3- ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்து, ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வேலூர் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அதேபோல் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வேலூர் மக்களவை தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் குடியாத்தத்தில் இருந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை, தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், ஜெய்சங்கர், ஜெகன் மற்றும் லோகேஷ் போன்றோர், ஆகஸ்ட் 2ந்தேதி காலை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தவர்கள், அவரோடு சேர்ந்து ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவர்களே வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் தான் வாக்குபெட்டிகளை வாக்குசாவடிக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபடுவார்கள், அதேபோல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குபெட்டிகளை குடோனில் வைத்து சீல் வைத்த பின், அந்த பெட்டிகளை வாக்கு எண்ணும் மையம் டேபிளுக்கு கொண்டு செல்வதும் இவர்களது பணி தான். இப்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சரியா என்கிற கேள்வியை திமுக தரப்பில் இருந்து கேட்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் செய்யவும் திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் ஒருவேளை ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால், இந்த காரணத்தை வைத்தே அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதுப்பற்றி அவர்கள் குறிப்பிடும் போது, இந்திராகாந்தி பிரதரமாக இருந்த போது 1974ல் நடைபெற்ற பாராளுமன்ற பொது தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட்ட போது, அவரது உதவியாளராக இருந்த அரசு ஊழியர் இந்திராகாந்திக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வெற்றியை ரத்து செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். அதே போன்று தான் இங்கும் நடந்துள்ளது என்கிறார்கள்.