கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகே நேற்று மனித மண்டை ஓடு இரண்டும், சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை மாவட்டம், கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் காமாட்சி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், அந்தக் கோயில் அருகே மனித மண்டை ஓடு போல் தென்பட்டதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். பிறகு சந்தேகத்துடன் அருகே சென்று பார்த்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு இரு மனித மண்டை ஓடுகள் வெட்ட வெளியில் வீசப்பட்டுள்ளன. மேலும், அதன் அருகே சில எலும்புகள் ஒரு கவரில் கட்டி வீசப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராமநாதபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் விஷயம் வெளியே தெரிந்து அங்கு அதிகளவில் மக்கள் குவியத் துவங்கினர்.
அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடனடியாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி, அங்கிருந்த மனித மண்டை ஓடுகளையும், கவரில் இருந்த எலும்புகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட எலும்புகளும், மண்டை ஓடுகளும் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராமநாதபுரம் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், ஒரு மண்டை ஓடு சரியாக பாதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தும் முறை. அதனால், இது மருத்துவ பயிற்சிக்கு உபயோகப்படுத்திய மண்டை ஓடுகளாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால், அப்படி பயன்படுத்தும் எலும்புகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது போல், பொதுவெளியில் வீசிவிட்டு செல்ல முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரிய வரும்.
மனித மண்டை ஓடு கோயிலுக்கு அருகே கிடைத்துள்ளதால், இது மாந்திரீகத்திற்கு உபயோகிக்கப்பட்டதா எனும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கொலை செய்யப்பட்ட மண்டை ஓடுகளா எனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவையில் கோயில் அருகே இரு மனித மண்டை ஓடுகளும், சில எலும்புகளும் பொதுவெளியில் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.