கோவை குனியமுத்தூர் தனியார் கல்லூரி மாணவர் ஒருவருக்கு நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வரும் காவலர் ஐயா ஆளு கணேசனுக்கு கல்லூரி மாணவர்கள் அறையில் கஞ்சா அடிப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அந்தக் கல்லூரி மாணவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற காவலர் ஐயா ஆளு கணேசனும் அவரது நண்பர்களும், மாணவர் கஞ்சா அடித்து கொண்டு இருந்தை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
பின்னர் மாணவர் மீது வழக்கு போட்டு விடுவதாகக் கூறி ரூபாய் 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் காவலர். பயந்து போன கல்லூரி மாணவர் ரூபாய் 43 ஆயிரம் பணத்தைக் காவலர் ஐயா ஆளு கணேசனிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் காவலர் ஐயா ஆளு கணேசன் தன்னிடம் இருந்த வீடியோவை, தனது நண்பர் பைசல் என்பவரிடம் கொடுத்து மீண்டும் மாணவரை மிரட்டச் சொல்ல, மாணவரிடம் தாங்களும் காவல்துறையினர் தான் என்று மிரட்டிய பைசல், ரூபாய் 2 லட்சம் கொடுக்கவில்லை எனில் கைது செய்து விடுவோம் என்றிருக்கிறார். இல்லையெனில் வீடியோவை ஊடகங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளார்.
அவ்வளவு தொகை தர முடியாது எனக் கூறிய இளைஞர் ரூபாய் 80 ஆயிரம் தருவதாக கூறி முதல்கட்டமாக ரூபாய் 35 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவரால் பணத்தைப் புரட்ட முடியவில்லை. பணம் கொடுக்காததால் பைசல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த மாணவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து காவலர் ஐயா ஆளு கணேசன், சதீஷ்குமார், அப்சல், சலீம் பாஷா, நவ்ஷாத், ஜெய்னுலாபூதீன், சிவானந்தம் ஆகிய 7 பேரை கைது செய்தனர். பைசல் உட்பட மேலும் 3 பேரை குனியமுத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.