ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் உலகையே உலுக்கி எடுத்துள்ள கரோனா எனும் கொடிய வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் களையிழந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், இவ்வருட ரம்ஜானை புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து இஸ்லாமிய முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், "கரோனாவால் பொருளாதரத்தை, முழுமையாக வாழ்வை இழந்துள்ள இந்த சூழலில் ரம்ஜான் பண்டிகையை பெரிதாக கொண்டாட வேண்டாம் என நினைத்தாளும் வீட்டில் உள்ள பிள்ளைகளுக்காக புது துணிகளை எடுக்கலாம் என நினைத்தாலும் அது முடியவில்லை. ரம்ஜானை முன்னிட்டு முக்கிய கடைகளை சில நிபந்தனைகளுடன் திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும் வரும் மே 31 ம் தேதி வரை பிரதான ஜவுளி கடைகளை திறப்பதில்லை என வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தீபாவளியை போல ரம்ஜான் காலத்திலும் பரபரப்பாக காணப்படும் கும்பகோணம் நகரப்பகுதியில் பெரிய ஜவுளிக் கடைகள் திறக்கப்படாமல் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் ஒரு சில சிறிய ஜவுளி கடைகள் திறந்தாலும் புதிய துணிகளை எடுக்க செல்லும் போது கரோனா தொற்று ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அதனால் இஸ்லாமிய ஜமாத்தார்கள் நாமாகவே தவிர்த்துவிடலாம் என தவிர்த்து வருகின்றனர். அதனை சக முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டு இவ்வருடம் ரம்ஜான் பண்டிகையை புது ஆடைகள் அணியாத பண்டிகையாகவே எங்கள் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்" என்கிறார்.