கோவை அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் படித்துவருகிறார்கள். இந்தநிலையில் கல்லூரி மாணவர்கள், பி.பி.ஏ.துறைத் தலைவரும், பேராசிரியருமான ரகுநாதன் (42) என்பவர் பாலியல் தொந்தரவு செய்வதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
20 வயது மாணவி ஒருவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ. படித்துவருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்.
மாணவி இரண்டாம் ஆண்டு படித்தபோது, சரியான முறையில் பாட நோட்ஸ் எழுதவில்லை என்ற காரணத்திற்காக அடிக்கடி வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி ரகுநாதன் பேசியுள்ளார். மேலும், மாணவியைப் பல்லடத்திலிருந்து கோவைக்கு தனது காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது, தான் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் அந்த மாணவியின் கையைப் பிடித்து ரகுநாதன் கேட்டுள்ளார். ஆனால் அந்த மாணவி ரகுநாதன் கையைத் தட்டிவிட்டுள்ளார். மேலும், சூலூர் அருகே கார் வந்தபோது காரிலிருந்து இறங்கி தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி நேற்று (25.11.2021) கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் "இத்தகைய கேவலமான ஆட்களை சும்மா விட்டுவிடாதீர்கள். ஒரு பெண்ணைத் தொட்டால் அந்தநாள்தான் அவனுடைய கடைசிநாளாக இருக்க வேண்டும். அவ்வாறு அவன் பயப்பட வேண்டும். அந்த அளவுக்குக் கொடுமையான தண்டனையைப் பெற்றுத் தாருங்கள் என்று சுயநினைவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘கல்லூரி பேராசிரியர் ரகுநாதன், 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தவறான குறுஞ்செய்தி அனுப்புகிறார். இரவு நேரங்களில் மாணவிகளைத் தொடர்ந்து செல்ஃபோனில் அழைத்து ஆபாசமாகப் பேசுகிறார். மாணவிகளின் குடும்ப சூழ்நிலையை அறிந்துகொண்டு அறிவுரை கூறுவதுபோல், ஆசை வார்த்தையில் பேசுகிறார். வகுப்பு நேரம் முடிந்த பின்னரும் பேராசிரியர் தனது அறைக்கு அழைத்து யாரும் இல்லாத நேரத்தில், தகாத வார்த்தைகளில் மாணவிகளிடம் பேசிவருகிறார். மேலும் இதுபோன்ற பல பாலியல் தொந்தரவுகளைப் பேராசிரியர் செய்துள்ளார். எனவே பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி முதல்வரிடம் புகார் மனு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும், நேற்று கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி சார்பில் பேராசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரியின் இன்டர்ணல் புகார் கமிட்டியின் சார்பில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி மேற்பார்வையில் விசாரணை நடந்தது. இதில், பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பேராசிரியர் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விசாரணை நடத்தினார்.
அதேசமயம் கோவையில் மாணவர்களின் போராட்டம் வலுத்ததை தொடர்ந்து, நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசார் பேராசிரியர் ரகுநாதனை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர் மீது 363 (கடத்தல்), 354 (பெண்ணின் உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) 506 (கொலைமிரட்டல்), பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் (4) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
கோவையில் பிளஸ்-2 மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சம்பவமாக அரசு கல்லூரி பேராசிரியர் கைதான சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.