“நா ஒரே தடவ தான் மனு கொடுத்தேன். அந்த கலெக்டர் உடனே ஆர்டர் கொடுத்துட்டாரு. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என ஆட்சியர் அலுவலகத்தில் நெகிழ்ச்சியோடு பேசும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடியோ பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ஜோதி. இவர் தனது பத்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, தனது ஒரு காலை இழந்து மாற்றுத்திறனாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தனக்கு மாற்றுத்திறனாளிகள் இயக்கக்கூடிய இருசக்கர வாகனத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவுக்கு உடனடியாக பதிலளித்த அரசு அதிகாரிகள், இருசக்கர வாகனம் வழங்க இரண்டு மாதங்கள் ஆகும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, நேராக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜோதி, தனக்கு வெளியே சென்று வர மிகுந்த சிரமமாக இருப்பதாகவும், தனக்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணான ஜோதியின் வேண்டுகோளை ஏற்ற கலெக்டர், அந்த பெண்ணின் மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வண்டியை இன்றே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்பிறகு, மாற்றுத்திறனாளி ஜோதிக்கு கலெக்டர் மூலமாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டு மாதத்திற்குள் இருசக்கர வாகனம் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாற்றுத்திறனாளி ஜோதி, "நா ஒரே தடவ தான் மனு கொடுத்தேன். உடனே பதில் சொன்னாங்க. அதுக்கு அப்புறோம், சைக்கிள் வேணும்னு கேட்டேன். உடனே கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மாவட்ட கலெக்டருக்கும், தமிழக முதல்வருக்கும் ரொம்ப நன்றி" என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அதே சமயம், மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கை மனு, உடனுக்குடன் நிறைவேற்றப்பட்ட சம்பவம், பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.