தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மீண்டும் ஒரு முறை அவமதிப்பு நிகழ்ந்திருப்பதும், மத்திய பாஜக அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே இத்தகைய தரந்தாழ்ந்த செயல் நடந்திருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, உலக வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியில் மதம் சார்ந்த இறைவணக்கப் பாடல் இசைக்கப்பட்டு, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடக்கமாகவும், நாட்டுப்பண் நிறைவாகவும் இசைக்கப்படும் நிலையில், மத்திய அரசின் நிறுவனமான ஐ.ஐ.டி.யில் தமிழ் மொழியையும் தமிழர்களின் பண்பாட்டையும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, மதச்சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் மதத்தைப்போற்றும் பாடல் இசைக்கப் பட்டிருப்பது, திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது.
இதற்கு என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மத்திய அரசு என்றால் இந்தி - சமஸ்கிருதம் இவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் என்பதும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தும் என்பதும் நான்காண்டுகால பா.ஜ.க. அரசில் தொடர்கதையாக உள்ளது.
இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மைதான். அதனைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறையை, மத்திய பாஜக ஆட்சியாளர்கள் இனியாவது கைவிடவேண்டும் என்றும், சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய தவறுகள் நேராதிருக்க உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.