சேலம் மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் முக்கிய பகுதிகளில் ஒன்றான அம்மாப்பேட்டை பகுதியில் 'தியாகி அருணாச்சலம் தெருவில்' பாதி அளவு தார் சாலைகளும் , மீதமுள்ள சாலைகள் மண் சாலைகளாக உள்ளன. இந்த மண் சாலையானது கிட்டத்தட்ட 10 ஆண்டிற்கு மேல் இதே நிலையே காணப்படுகிறது. இந்த பகுதியானது சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. ஆனால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தான் வெற்றிப் பெற்ற பின்பு இந்த தெருவில் வசிக்கும் மக்களை சந்திக்க வரவே இல்லை. இவர்கள் வசிக்கும் தெருவிற்கு தார் சாலைகளை அமைத்து தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வளர்ச்சி மேம்பாடு நிதி ஆண்டுதோறும் தமிழக அரசால் ஒதுக்கப்படுகிறது. அதே போல் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 100 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்கு விடுவித்தது. அத்தகைய நிதி என்ன ஆனாது? தமிழக அரசு ஒதுக்கிய நிதி தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மக்களுக்காக செலவிடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.
![SALEM](http://image.nakkheeran.in/cdn/farfuture/5ryhRmREh6DER6llisMaNMSEtj-IzD2qgjfwiKDAkR4/1558181144/sites/default/files/inline-images/IMG-20190517-WA0002%20%281%29.jpg)
இந்த தெருவில் நேற்று பெய்த மழையால் மழைநீர் மற்றும் கழிவு நீர் இரண்டும் கலந்து சாலையில் செல்கிறது. மழைநீர் சாலையில் தேங்குவதால் தெருவில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த தெருவில் வீடுகளைக் கட்டியவர்கள் சிலர் தெரு நிலத்தையும் ஆக்கிரமித்துக் கட்டியுள்ளனர். அதனாலும் தெருவில் சாலை அமைப்பது தடைப்பட்டுள்ளது. தெருவை ஆக்கரமித்தவர்கள் நீதிமன்றம் மூலம் சாலை அமைக்கவோ, ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு தடை ஆணையும் பெற்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் , சேலம் மக்களவை தொகுதி உறுப்பினர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர்கள் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம் மாநகரத்தில் வளர்ந்து வரும் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்மாப்பேட்டை. அத்தகைய பகுதியிலேயே அடிப்படை வசதிகளான சாலை மற்றும் சாக்கடை வசதிகள் இல்லாத இருக்கும் நிலையில், மற்ற இடங்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது? இது தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகம் , தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு இந்த தெருவில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.