கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிக்கு அருகே உள்ள தாளியூர் கிராம பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், கேரள எல்லையான தாளியூர் பகுதியில் உள்ள வனத்திலிருந்து வெளியே வந்த 5 காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்தன. காட்டு யானைகள் திமிறிக் கொண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர் ஊருக்குள் வந்த யானை கூட்டத்தை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் சாலையின் குறுக்கே அங்கும் இங்கும் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.
அப்போது, சுற்றி இருந்த பொதுமக்கள் சிலர் யானை கூட்டத்தை நோக்கி வீடியோ எடுக்கும் போது தங்களது குட்டி யானையின் முகத்தைக் காட்டாமல் 4 பெரிய யானைகள் சூழ்ந்துகொண்டு, அந்த குட்டி யானையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.